காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கு
முதுமலை-கூடலூர் சாலையில் காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கை மீட்டு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;
கூடலூர்
கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக வாகனங்கள் வரும் போது, முதுமலை சாலையோரம் குரங்குகள், மயில்கள் வந்து நிற்பது வழக்கம். அப்போது சுற்றுலா பயணிகள் சிலர் குரங்குகள், மயில்களுக்கு தின்பண்டங்களை வழங்கி வருகின்றனர். இதனால் சில சமயங்களில் வாகனங்களில் அடிபடும் நிலையும் உள்ளது. இந்தநிலையில் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் கார்குடி பகுதியில் படுகாயத்துடன் குரங்கு ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. அதன் அருகே மற்ற குரங்குகள் சோகத்துடன் நின்றவாறு காணப்படுகிறது.
குரங்கு வலியால் துடித்தவாறு ஓடுகிறது. காயமடைந்த குரங்கிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து கார்குடி வனச்சரகர் விஜயன் கூறும்போது, குரங்கு எப்படி காயம் அடைந்தது என தெரியவில்லை. இருப்பினும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான பணியில் ஈடுபட்ட போது குரங்கு ஓடி விடுகிறது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் அதைப் பிடித்து சிகிச்சை அளிப்பதற்கான பணி நடைபெறும் என்றனர்.