சுத்தியலால் மனைவியை கொடூரமாக தாக்கிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

அருமனை அருகே மனைவியை சுத்தியலால் கொடூரமாக தாக்கிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-21 18:45 GMT

அருமனை, 

அருமனை அருகே மனைவியை சுத்தியலால் கொடூரமாக தாக்கிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பால்வெட்டும் தொழிலாளி

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள குட்டைக்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (வயது 55), பால் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி ரெஜினாள் (47). இவர்களுடைய மகள் ரெஜிதா. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ரெஜிதா கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அவர் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் தங்கப்பனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது இருவரையும் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

மனைவியை தாக்கினார்

நேற்று மதியம் தங்கப்பனின் மகள் ரெஜிதா மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அந்த சமயத்தில் வீட்டில் இருந்த தங்கப்பனுக்கும் அவருடைய மனைவிக்கும் ரெஜினாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தங்கப்பன் வீட்டில் கிடந்த சுத்தியலால் ரெஜினாளின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் சுருண்டு கீழே விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காமல் சுத்தியலால் சரமாரியாக தாக்கினார். இதில் ரெஜினாள் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

தூக்குப்போட்டு தற்கொலை

ஆவேசத்தில் புத்தி இழந்து விட்டோமே எனக்கருதி தனது அறைக்குள் சென்று தூக்கில் தொங்கி தங்கப்பன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதற்கிடையே சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ள உறவினர் ஒருவர் வந்தார். அவர் ரெஜினாள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், தங்கப்பன் பிணமாக தொங்கியதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடைேய அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினர். மேலும் கடைக்கு சென்றிருந்த தங்கப்பனின் மகள் ரெஜிதாவும் அங்கு வந்து நடந்த சம்பவத்தை அறிந்து கதறி அழுதார்.

மேலும் ரெஜினாளை மீட்டு பொதுமக்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ேமல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு

அதே சமயத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய தங்கப்பனின் உடலை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப பிரச்சினையால் மனைவியை சுத்தியலால் கொடூரமாக தாக்கிவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்