காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

மசினகுடி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-12-28 18:45 GMT

கூடலூர், 

மசினகுடி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

காட்டு யானை தாக்கியது

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா சோகப்பட்டியை சேர்ந்தவர் காலன். இவரது மகன் மாதன் என்ற பொட்ட காலன் (வயது55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து மாவனல்லா சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை மாதனை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து காட்டு யானையை விரட்டினர். பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மாதனை மீட்டு மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

தொழிலாளி பலி

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பலியான மாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பலியான மாதனுக்கு மாரா என்ற மனைவி மற்றும் பெள்ளி, சீதா என 2 மகள்கள் உள்ளனர். இதுகுறித்து மசினகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மசினகுடி சுற்றுவட்டார பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்