கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா

திருப்பத்தூர் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவரது மாமியார் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-12 17:46 GMT

காதல் திருமணம்

திருப்பத்தூர் அருகே உள்ள ப.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முனிகண்ணன் என்பவரின் மகன் திருப்பதி (வயது 23). இவரும், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் நீலாம்பரி (22) என்பவரும் காதலித்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் பெண்ணின் வீட்டிலேயே 2 மாதங்களாக வசித்து வந்தனர். பின்னர் திருப்பதி தனது வீட்டிற்கு பெற்றோர்களிடம் பேசி அழைத்து செல்வதாக கூறி ஒரு மாதத்திற்கு முன்பு சென்றார். அங்கு சென்ற திருப்பதி தலைமறைமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

நகை, பணம்

இதனால் நீலாம்பரி திருப்பதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது எனக்கு ரூ.25 லட்சம் ரொக்கம், 30 பவுன் நகை மற்றும் திருப்பத்தூரில் சொகுசு வீடு வாங்கி கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் பெற்றோரின் விருப்பம். அதை தான் நானும் கேட்கிறேன், இல்லை என்றால் உன்னோடு வாழ முடியாது என கூறி நீலாம்பரியின் செல்போன் நம்பரை பிளாக் செய்து உள்ளார்.

இதுகுறித்து நீலாம்பரி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தர்ணா போராட்டம்

ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் திடீரென நேற்று நீலாம்பரி, திருப்பதியின் வீட்டின் முன்பு தனது கணவனுடன் சேர்த்து வைக்கும்படியும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் திருப்பதியின் தாயார் பிரபாவதி திடீரென விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்