2 கோவில்களில் நகை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு
கடையநல்லூரில் 2 கோவில்களில் நகை திருடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் காளியம்மன் கோவில், கங்கை அம்மன் கோவில் ஆகியவை அருகருகில் உள்ளன. நேற்று காலையில் காளியம்மன் கோவிலுக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சாமி கும்பிடுவது போன்று நடித்து, திடீரென்று கோவில் கருவறைக்குள் சென்றார். பின்னர் அம்மன் கழுத்தில் கிடந்த 5 கிராம் தங்க தாலியை திருடிச் சென்றார். தொடர்ந்து அருகில் உள்ள கங்கை அம்மன் கோவிலுக்கும் சென்று, அம்மன் கழுத்தில் கிடந்த 5 கிராம் தாலியை திருடிச் சென்றார்.
சிறிதுநேரத்தில் கோவிலில் பூஜை செய்ய வந்த பூசாரி, அம்மன் கழுத்தில் கிடந்த நகை திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்களுக்குள் புகுந்து மர்மபெண் நகைகளை திருடிச் சென்ற காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதனை ஆய்வு செய்த போலீசார், தலைமறைவான பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.