கடம்பூர் அருகேயுள்ள மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி இவருடைய மனைவி மைலா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவருடைய உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். கடம்பூரை அடுத்த கிட்டாபாளையம் அருகே சென்றபோது மைலாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் டிரைவர் வரதராஜன், ஆம்புலன்சை நிறுத்தி உள்ளார். இதையடுத்து மைலாவுக்கு ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் குமரேசன், பிரசவம் பார்த்தார். அதில் மைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் தாயும்- சேயும் நலமாக உள்ளனர்.