மின்வேலியில் சிக்கி காட்டு யானை சாவு

கொளத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது.;

Update:2022-07-25 02:48 IST

சேலம்,

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கூல் கரடுபட்டி. தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதி அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பணப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை உணவு தேடி கிராம எல்லைக்குள் வந்தது. அந்த யானை விவசாய தோட்டத்துக்குள் உணவு தேடி உள்ளது. அப்போது அங்கிருந்த மின்வேலியில் யானை சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட வன அலுவலர் கவுதமன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை டாக்டர் மூலம் சம்பவ இடத்திலேயே பலியான யானையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.

கடும் நடவடிக்கை

இது குறித்து மாவட்ட வன அலுவலர் கவுதமன் கூறியதாவது:-

கொளத்தூர் அருகே புஷ்பநாதன் என்பவர் தனது தோட்டத்தில் மின் வேலி அமைத்துள்ளார். அதில் சிக்கிய 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்துள்ளது. விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவிக்கப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காக இதுபோன்ற சட்டவிரோதமாக மின்வேலியை அமைக்கின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காட்டு யானை உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்