களைகட்டிய ஆட்டுச்சந்தை
கோபால்பட்டியில் நேற்று ஆடு, கோழி சந்தை நடைபெற்றது.
கோபால்பட்டியில் சனிக்கிழமை தோறும் ஆடு, கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் கணவாய்பட்டி, வேம்பார்பட்டி, அய்யாபட்டி, மணியகாரன்பட்டி, அஞ்சுக்குளிபட்டி, ஜோத்தாம்பட்டி, பாறைபட்டி உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள், ஆடு, கோழி வளர்ப்போர் தங்களது ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காலை கோபால்பட்டியில் ஆடு, கோழி சந்தை நடைபெற்றது. தற்போது ஆடி மாதம் என்பதால் பல்வேறு ஊர்களில் கருப்பசாமி, அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறுகிறது. மேலும் கோவில்களில் பக்தர்கள் ஆடு, சேவல்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதையொட்டி வாரச்சந்தையில் ஆடு, கோழி வாங்க ஏராளமானோர் குவிந்தனர். உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர் ஆர்வத்துடன் ஆடுகளை தேர்வு செய்து வாங்கினர். இதனால் வாரச்சந்தை களைகட்டியது.
இந்த சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்கிடா கூடுதல் விலைக்கு விற்பனையானது. கடந்த வாரங்களில் ரூ.7 ஆயிரம் என விற்பனை ஆன ஆட்டுக்கிடா நேற்று ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. இதேபோல் நாட்டு கோழியும் 1 கிலோ ரூ.400 என விற்பனையானது. கூடுதல் விலை கிடைத்ததால் ஆடு, கோழிகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.