கன்னி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்
கன்னி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்
குப்பைகளால் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கன்னி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
வலங்கைமான் பேரூராட்சி வலைமாபுரம் சாலை அருகில் கன்னி பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது இந்த வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்கள் குப்பைகள் கொட்டும் பகுதியாக மாறிவிட்டது. மேலும் குப்பைகளுடன் கழிவுநீரும் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் பாசனத்திற்கு வாய்க்காலை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வாய்க்காலில் குப்பைகள், கழிவு நீர் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூர்வார வேண்டும்
இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த வாய்க்காலில் சில ஆண்டுகளாக தண்ணீர் செல்லாததால் நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் குப்பைகளால் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கன்னி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்