காய்கறி, மூலிகை தோட்டம் அமைக்க வேண்டும்

அங்கன்வாடி மையங்களில் காய்கறி, மூலிகை தோட்டம் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.

Update: 2023-07-04 19:09 GMT

காய்கறி, மூலிகை தோட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் கட்டுப்பாட்டில் அரசு கட்டிடத்தில் 662 அங்கன்வாடி மையங்கள், இலவச கட்டிடத்தில் 135 மையங்கள், வாடகை கட்டிடத்தில் 171 மையங்கள் என மொத்தம் 968 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட வேண்டும்.

நமது மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் உடல் எடை வயதிற்கேற்ப சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எந்தெந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளதோ அந்த குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள், ஊட்டச்சத்து உள்ள உணவுகளை வழங்கி சரிசெய்ய வேண்டும்.

சத்தான உணவு

மேலும், குழந்தைகளுக்கு புரதச்சத்து, பயறு வகைகள் கொண்ட உணவை வழங்கிட வேண்டும். குழந்தைகளை நன்றாக விளையாட விட வேண்டும். அனைத்து அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கும் சத்தான உணவை, தரமாகவும், சுகாதாரமான முறையில் தயார்செய்து வழங்கிட வேண்டும். கர்ப்பிணி தாய்மார்களை சத்தான உணவுகளை உட்கொள்ளவைத்து, பிறக்கின்ற குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செந்தில்குமார், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்