காவலாளி கொலையில் நண்பரை பிடிக்க தனிப்படை தீவிரம்

சொத்தவிளையில் நடந்த காவலாளி கொலையில் நண்பரை பிடிக்க தனிப்படை தூத்துக்குடி விரைந்தது.

Update: 2022-12-18 18:45 GMT

மேலகிருஷ்ணன்புதூர்,

சொத்தவிளையில் நடந்த காவலாளி கொலையில் நண்பரை பிடிக்க தனிப்படை தூத்துக்குடி விரைந்தது.

காவலாளி மாயம்

நாகர்கோவில் கணேசபுரம் என்.வி.கே. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45) இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு புகைப்படம் எடுப்பதில் ஈடுபாடு உண்டு. இதனால் அவ்வப்போது புகைப்படகலைஞராகவும் பணி புரிந்து வந்தார்.

இவருடைய மனைவி ராதா (42). இவர்களுக்கு அனுஸ்ரீ(10), சுபஸ்ரீ (9) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் திரும்பி வரவில்லை. அதைத்தொடர்ந்து ராதா கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாயமான முருகன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சொத்தவிளை கடற்கரை சாலையில் ரத்த காயங்களுடன் ஒருவர் பிணமாக கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கன்னியாகுமரி துணைசூப்பிரணடு ராஜா, சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராபர்ட் செல்வசிங், ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தது முருகன் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து முருகனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

நண்பருடன் சென்றார்

அப்போது முருகன் வீட்டில் இருந்த ேபாது அவருடைய நண்பர் அழைத்து சென்றார் என்பது தெரிய வந்தது. அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், தற்போது நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.

அவரை பிடிப்பதில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டனர். இதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

மோட்டார் சைக்கிள் மீட்பு

இதனால் முருகனின் நண்பர் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. அவருக்கு முருகன் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும் கருதினார்கள். அதைத்தொடர்ந்து அவரை பிடிக்க துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் முருகனின் மோட்டார் சைக்கிள் மாயமானது குறித்தும் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் வடசேரி பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

தனிப்படை விரைந்தது

இதனால் முருகனை அவருடைய நண்பரே கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் வடசேரி பஸ் நிலையம் வந்து இருக்கலாம். அதன்பிறகு அவர் தூத்துக்குடிக்கு பஸ்சில் சென்று இருக்கலாம் என்றும் போலீசார் முடிவு செய்தனர். அவர் வீடுகளுக்கு கொசு வலை அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

எனவே வடசேரி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் முருகனின் நண்பரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்து உள்ளனர்.

காரணம் என்ன?

இந்தநிலையில் முருகனின் நண்பரின் மோட்டார் சைக்கிள் சில தினங்களுக்கு முன் திருட்டு போனது. அது தொடர்பாக முருகனுக்கும், நண்பருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாகவும், அதன் எதிரொலியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்றும் போலீசார் கூறுகிறார்கள்.

மேலும் முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சாலை துண்டிக்கப்பட்டநிலையில் உள்ளது. எனவே இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது. மேலும் முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பகுதியில் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவே அவரை வேறு இடத்தில் கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

மேலும் ஒரு நபர் மட்டும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே முருகனின் நண்பர் கிடைத்தால் தான் கொலைக்கான காரணம் மற்றும் இதில் எத்தனை பேருக்கு தொடர்பு உண்டு என்பது தெரிய வரும்.

உடல் ஒப்படைப்பு

கொலை செய்யப்பட்ட முருகன் உடல் நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் அவருடைய மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் முருகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் உடலில் நெஞ்சு, கை, வயிறு உள்பட ஐந்து இடங்களில் ஆழமான கத்திக்குத்து விழுந்து உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்