வாலிநோக்கம் பகுதியில் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பு நிறுத்தம்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சீசன் மாறுபாட்டால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் வாலிநோக்கம் பகுதியில் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வருமானம் இன்றி மீனவர்கள் தவிக்கின்றனர்.

Update: 2023-05-22 18:45 GMT

சாயல்குடி, 

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சீசன் மாறுபாட்டால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் வாலிநோக்கம் பகுதியில் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வருமானம் இன்றி மீனவர்கள் தவிக்கின்றனர்.

மீன்பிடி தொழில்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதுபோல் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், ஏர்வாடி, தொண்டி மற்றும் சாயல்குடி அருகே மூக்கையூர், மாரியூர் கீழமுந்தல், மேலமுந்தல், வாலிநோக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் மீன்பிடி தொழிலை நம்பி ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அது போல் மீன்பிடிப்பதில் சிறிய வத்தை, பைபர் படகு, நாட்டு படகு, விசைப்படகு என பல முறைகளில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தாலும் தற்போது வரையிலும் பாரம்பரியம் மாறாமல் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் பகுதியில் மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கடல் சீற்றம்

அதுபோல் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதும் அக்டோபர் மாதத்தில் இருந்து வடக்கு கடல் பகுதியான பாக்ஜல சந்தி கடல் பகுதி கடல் சீற்றமாகவே காணப்படும். பிப்ரவரி மாதம் வரையிலும் இந்த சீசனில் வடக்கு கடல் சீற்றமாக காணப்படும்.

அதே நேரத்தில் மாவட்டத்தின் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதி சீற்றம் இல்லாமல் அமைதியாகவே காணப்படும். இது போன்ற சீசனை பயன்படுத்தி இந்த இரண்டு கடல் பகுதியிலும் கரைவலை மீன்பிடிப்பில் ராமேசுவரம், பாம்பன், வாலிநோக்கம், கீழமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களாகவே கரைவலை மீன்பிடிப்பில் ஆர்வத்துடன் மீனவர்கள் ஈடுபட்டனர்.

வருமானம் இன்றி தவிப்பு

இதனிடையே வாலிநோக்கம் கடல் பகுதியில் காற்றின் வேகம் மாறுபட்டு கடந்த 1 மாதத்திற்கு மேலாகவே கடல் சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் கரைவலை மீன்பிடிப்பை மீனவர்கள் நிறுத்தி உள்ளனர்.

குறிப்பாக வாலிநோக்கம் முதல் கீழ முந்தல், மேலமுந்தல், மாரியூர் வரையிலான கடற்கரை பகுதி மீனவர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றது. கரைவலை மீன்பிடிப்பை கடல் சீற்றம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் அதை நம்பி வாழும் ஏராளமான மீனவ குடும்பத்தினர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இன்னும் 4 மாதங்களுக்கு மேலாக மன்னார் வளைகுடா கடல் பகுதி சீற்றமாக காணப்படும் என்பதால் இந்த பகுதிகளில் கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் ஈடுபட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்