மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி டிப்ளமோ என்ஜினீயர் பலி
வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி டிப்ளமோ என்ஜினீயர் பலியானார்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை கீழ அண்டகத்துறை பகுதியை சேர்ந்தவர் பிலவேந்திரன். இவருடைய மகன் ஆல்பர்ட் சேவியர் (வயது 24).இவர் டிப்ளாமோ என்ஜினீயர். இவர் நேற்று மதியம் நாகைக்கு சென்று விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கருவேலங்கடை அருகே வந்தபோது எதிரே வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆல்பர்ட்சேவியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆல்பர்ட் சேவியர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.