டயர் வெடித்து கார் சுவரில் மோதியது; ஐ.டி. ஊழியர் பலி

விருதுநகர் அருகே டயர் வெடித்ததால் கார் சுவற்றில் மோதிய விபத்தில் ஐ.டி. ஊழியர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-12-11 19:08 GMT


விருதுநகர் அருகே டயர் வெடித்ததால் கார் சுவற்றில் மோதிய விபத்தில் ஐ.டி. ஊழியர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி சென்றனர்

சென்னை போரூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் கொட்டிவாக்கத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 30), மகிமா பானு (23), ஆதம்பாக்கத்தை சேர்ந்த வினோ பேட்ரிக் (29), அம்பத்துரை சேர்ந்த கரிகாலன் (40), தணிகாசலம் நகரை சேர்ந்த ஆனந்தபாபு (30). இவர்கள் 5 பேரும் தங்களது நண்பரின் காரை வாங்கிக்கொண்டு திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று அதிகாலை கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.

டயர் வெடித்தது

கரிகாலன் காரை ஓட்டினார். விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் கோவில் புலிகுத்தி விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென முன்பக்க கார் டயர் வெடித்தது.

இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தின் சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஐ.டி. ஊழியர் பலி

கார் சுவரின் மீது மோதியதில் கரிகாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் காரில் இருந்த முத்துக்குமார், மகிமா பானு, வினோ பேட்ரிக் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். ஆனந்த் பாபு காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த வச்சகாரப்பட்டி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கரிகாலனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடன் வந்த சக ஊழியர் பலியானதை கண்டு காரில் வந்த ஐ.டி. ஊழியர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்