மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி

முதுமலையில் புள்ளி மானை புலி வேட்டையாடி இழுத்துச் சென்றது. இதனை வாகன சவாரியின் போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2023-01-08 18:45 GMT

கூடலூர், 

முதுமலையில் புள்ளி மானை புலி வேட்டையாடி இழுத்துச் சென்றது. இதனை வாகன சவாரியின் போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வாகன சவாரி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், புள்ளி மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை காண வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்து செல்கின்றனர். தொடர்ந்து வனத்துறை வாகனங்கள் மூலம் சவாரி செய்து வனவிலங்குகளையும், அடர்ந்த வனப்பகுதியையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்கள்.

பெரும்பாலும் வாகன சவாரி செல்லும்போது காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை மட்டும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். சில சமயங்களில் மட்டுமே மிக அபூர்வமாக புலி நடந்து செல்வதை கண்டு ரசிக்கின்றனர். இதேபோல் வனவிலங்குகளை காணாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகளும் உள்ளனர்.

மானை வேட்டையாடிய புலி

தொடர் விடுமுறைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வார இறுதி நாள் என்பதால் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அப்போது முதுமலை தெப்பக்காடு வரவேற்பு மையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை வாகனங்களில் வன ஊழியர்கள் சவாரிக்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது 10 நிமிட பயணத்துக்கு பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணிகள், புள்ளி மான்கள் கூட்டமாக புற்கள் மேய்வதை கண்டனர். இதனால் வாகனத்தை நிறுத்தும்படி வன ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் வீடியோ காட்சியை பதிவு செய்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் புதருக்குள் பதுங்கி இருந்த புலி ஒன்று மான் கூட்டத்துக்குள் பாய்ந்தது.

இதை சற்றும் எதிர்பாராத மான்கள் சிதறி ஓடின. இருப்பினும் புலி ஒரு மானின் கழுத்தை கவ்வியது. பின்னர் புதருக்குள் மான் உடலை வேகமாக இழுத்துச் சென்றது. மானை வேட்டையாடிய புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த அபூர்வ காட்சியை சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்