2 மகள்களுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

விருதுநகரில் இளம் பெண், இரு மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-07-27 19:35 GMT

விருதுநகரில் இளம் பெண், இரு மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலெக்டரிடம் மனு

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சீதாலட்சுமி (வயது 31) என்ற பெண் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் அருகே உள்ள குராயூர் கிராமத்தில் எனது கணவர் முருகனுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னை பிரிந்து வேறொரு பெண்ணுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நான் எனது 2 மகள்களுடன் அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறை காந்தி நகரில் வசித்து வருகிறேன். அருப்புக்கோட்டையில் ஒரு ஜவுளிக்கடை நடத்தி வருகிறேன். இந்தநிலையில் கூத்திப்பாறையை சேர்ந்த எனது உறவினர் பாலாஜி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

திருமணம்

இந்நிலையில் பாலாஜி தனது பெற்றோருக்கு தன் மீது பாசம் இல்லாமல் இருப்பதாக கூறியதுடன், என்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தினார். இந்த திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் எனவும் பாலாஜி கூறி விட்டார். இந்நிலையில் கடந்த 16-4-2022-ல் திருமங்கலத்தில் வைத்து எனது உறவினர்கள் முன்னிலையில் என்னை பாலாஜி திருமணம் செய்து கொண்டார். கடந்த 17.4.2022-ல் பாதுகாப்பு கோரி திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தோம்.

இதையடுத்து நானும், பாலாஜியும் மதுரை தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரில் 24-7-2022 வரை தங்கி வாழ்ந்து வந்தோம். அப்போது பாலாஜியின் தந்தை பாலமுருகன் அருப்புக்கோட்டை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் போலீசார் பாலாஜியை அழைத்துச் சென்றனர்.

கொலை மிரட்டல்

அதன் பின் பாலாஜியைதொடர்பு கொள்ள முடியாத நிலையில் 3 நாட்களுக்கு பிறகு வேறொரு செல்போனில் இருந்து அழைத்த பாலாஜி தன்னை தனது பெற்றோர் கட்டிப்போட்டு வைத்துள்ளதாகவும் வந்து மீட்டு செல்லுமாறு தெரிவித்தார். இதையடுத்து நான் எனது உறவினர் முத்துமாரியுடன், பாலாஜியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றேன். அங்கு பாலாஜியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை மிரட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர்மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரும் பாலாஜியை விட்டு விடுமாறும் இல்லையேல் உனது வாழ்க்கை நாசமாகிவிடும் என்றும் எச்சரித்தனர். எனது வீட்டிலும் வாழ முடியாமல் கடையையும் நடத்த முடியாமல் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் நான் ஆதரவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே நான் எனது 2 மகள்களுடன் தீக்குளிக்கும் மனநிலையோடு கலெக்டர் அலுவலகம் வந்துள்ளேன். எனவே இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தீக்குளிக்க முயற்சி

கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த சீதாலட்சுமி கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு தன் மீதும், தனது மகள்கள் மீதும் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரையும், அவரது மகள்களையும் தடுத்தனர்.

பின்னர் அவர்களை ஆம்புலன்சில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூலக்கரை போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்