சுட்டெரிக்கும் கோடை வெயில்:மோட்டார் சைக்கிளில் குளித்தபடி சென்ற வாலிபர்சமூகவலைத்தளத்தில் வீடியோ வைரலாகிறது

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மோட்டார் சைக்கிளில் குளித்தபடி சென்ற வாலிபர் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது.

Update: 2023-05-14 18:45 GMT

பெண்ணாடம், 

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பெரும்பாலானவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நீர்ச்சத்து நிறைந்த பொருட்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதற்காக சாலையோரத்தில் தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரிப்பழம், வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்ட பல்வேறு கடைகளும் முளைத்துள்ளன. மேலும் சிலர் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் பெண்ணாடத்தில் வாலிபர் ஒருவர், செய்த செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெண்ணாடம் திருமலை அகரத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஆக்டர் ராசு (வயது 23). இவர் உச்சி வெயிலில் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்தபடி சென்றார். அப்போது அவர், ஒரு வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி குளித்தப்படி பயணம் செய்தார். பெண்ணாடம் பஸ் நிலையம், திட்டக்குடி சாலை, விருத்தாசலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் குளித்தவாறு சென்றதை பொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்