கஞ்சா போதையில் கடைகளை அடித்து நொறுக்கிய வாலிபர்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா போதையில் கடைகளை அடித்து நொறுக்கி வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-08 15:59 GMT

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா போதையில் கடைகளை அடித்து நொறுக்கி வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கஞ்சா போதை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. இதில் ஏராளமான சாதுக்கள் தங்கி வசித்து வருகின்றனர். சமீப காலமாக புதிது, புதிதாக பலர் காவி வேட்டியுடன் வந்து கிரிவலப்பாதையில் தங்கியுள்ளனர்.

கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் அடிக்கடி எழுந்து வருகின்றது. மேலும் புகார் வரும் சமயங்களில் போலீசாரும் கிரிவலப்பாதையில் சோதனை நடத்தி கஞ்சா வைத்திருப்பவர்களை பிடித்து வருகின்றனர். இருப்பினும் கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை குறையவில்லை.

இந்த நிலையில் காவி வேட்டி அணிந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலை அருகில் கஞ்சா போதையில் அங்கிருந்த நடைபாதை கடைகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த நபர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் அவர்களை தகாத வார்த்தையால் பேசினார். இதையடுத்து அவர்கள் அந்த நபரை பிடித்து கை மற்றும் கால்களை கயிறால் கட்டிப் போட்டனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அவரை பிடித்து கட்டி போட்டவர்களையும், பொதுமக்களையும், கிரிவலம் செல்லும் பக்தர்களையும் தகாத வார்த்தைகளால் வசை பாடினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்தவர்களே கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்து விட்டனர். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் கிரிவலப்பாதை-செங்கம் சாலையில் லாரி டிரைவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். தொடர்ந்து நேற்று காவி வேட்டி கட்டிய வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் கடைகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் கிரிவலப்பாதையில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்