செல்போனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்த வாலிபருக்கு கத்திக்குத்து
செல்போனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்த வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
துறையூர்:
துறையூரில் உள்ள விநாயகர் தெருவில் வசித்து வருபவர் சுபாஷ் சந்திரபோஸ்(வயது 23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக செல்போன் ஒன்று வாங்கி உள்ளார். சமீபத்தில், இவர் தனது செல்போன் காணவில்லை என்றும், அதை கண்டுபிடித்து கொடுக்கும்படியும் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த சந்தோஷ்(19) என்பவர் கூறியதன்பேரில் ஹரிஹரன்(20) என்பவர் சுபாஷ் சந்திரபோசின் செல்போனை எடுத்துக் கொண்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 15-ந் தேதி அவர் ஊருக்கு வந்துள்ளார். அப்போது சுபாஷ்சந்திரபோஸ், அவரிடம் இருந்து செல்போனை பெற்றுக்கொண்டதோடு துறையூர் போலீசில் கொடுத்த புகாரையும் திரும்ப பெற்றுள்ளார்.இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுபாஷ் சந்திரபோசை ஹரிஹரன், அபினேஷ்(20), சந்தோஷ் ஆகியோர் எழுப்பியுள்ளனர். அப்போது ஹரிஹரன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சுபாஷ் சந்திரபோசை குத்தியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மற்ற 2 பேரும் அவரை கட்டையாலும், கைகளாலும் தாக்கியுள்ளனர். இதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சுபாஷ் சந்திரபோஸ் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை துறையூர் போலீசார் தேடி வருகிறார்கள்.