பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை

திருவண்ணாமலை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் வாலிபர் பிணத்தை போலீசார் மீட்டனர்.

Update: 2023-09-07 17:47 GMT

திருவண்ணாமலை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் வாலிபர் பிணத்தை போலீசார் மீட்டனர்.

வாலிபர் மாயம்

திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு என்பவர் மகன் விஜய் (வயது 25). இவர் தொழில் ரீதியாக அவ்வப்போது வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து திரும்பி வீட்டிற்கு வருவது வழக்கம்.

அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற தகவலும் விஜயின் பெற்றோருக்கு கிடைக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பல இடத்தில் தேடியும் அவர் கிடைக்காததால் கடந்த 21-ந் தேதி விஜய் காணாமல் போனது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன விஜயை தேடி வந்தனர்.

தொடர்ந்து போலீசார் விஜயின் செல்போன் எண்ணை சோதனை செய்த போது அவர் கடைசியாக அவரது நண்பர் திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்த அருண் என்பவரிடம் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அழுகிய நிலையில் பிணம் மீட்பு

பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் புதூர் பகுதியில் உள்ள மக்கள் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது விஜயின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. மேலும் பிணம் மிகவும் அழுகி பாதியாக இருந்தது.

இதையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் அருணிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கத்தியால் குத்தினார்

விஜய்க்கும், அருணுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி அவர்கள் இருவரும் அய்யம்பாளையம் புதூர் பகுதியில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் குறித்து வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அருண் அவர் வைத்திருந்த கத்தியால் விஜயை குத்தியுள்ளார்.

இதில் காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்று அருகில் இருந்த கிணற்றில் குதித்தார். விஜய் எப்படியும் கிணற்றில் இருந்து வெளியே வந்து விடுவார் என்று அங்கிருந்து அருண் சென்று உள்ளார். இவ்வாறு அருண் தெரிவித்ததாக போலீசார் கூறினர். .

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்