ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
திருப்பத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சந்திரன் நகர் பகுதியில் வசிப்பவர் மாதையன். இவரது மகன் கார்த்திக் (வயது 26). இவருக்கு கடந்த 10 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கார்த்திக் நேற்று அதிகாலை 6.30 மணி அளவில் திருப்பத்தூர் ரெயில் நிலையம் புதுப்பேட்டை ரோடு டி.எம்.எஸ். பள்ளி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னை நோக்கி சென்ற வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரெயிலில் அடிப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.