கடலூருக்கு, தனியார் பஸ்சில் 2 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கடலூருக்கு, தனியார் பஸ்சில் 2 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் நேற்று ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ்சை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு வந்தனர். இதை அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த சென்னையை சேர்ந்த பாண்டியன் என்பவர் பார்த்து, தப்பிச்சென்று விட்டார்.
2 கிலோ கஞ்சா பறிமுதல்
தொடர்ந்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரித்த போது, அவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சூனாம்பேடு ஏரிக்கரை தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் பிரேம்குமார் (வயது 33) என்றும், அவர் தப்பிச்சென்ற பாண்டியனிடம் சென்னையில் இருந்து 2 கிலோ கஞ்சாவை வாங்கி, கடலூருக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய பாண்டியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் தான், அவர் எங்கிருந்து, யாரிடம் கஞ்சா வாங்கி, கடலூருக்கு கொண்டு வந்தார். யாரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்தார் போன்ற விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். முன்னதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பார்வையிட்டு, பிரேம்குமாரிடம் விசாரணை நடத்தினார். இருப்பினும் இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.