மாநகராட்சி கழிவறையில் வழுக்கி விழுந்து வாலிபர் பலி
மாநகராட்சி கழிவறையில் வழுக்கி விழுந்து வாலிபர் பலியானார்.
சென்னை,
சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர், கடந்த 23-ந்தேதி இரவு அதே பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பொது கழிவறைக்கு சென்றார். அப்போது, பராமரிப்பில்லாத கழிவறையில் நடந்துசென்றபோது வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு சுயநினைவிழந்து கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 3 நாட்கள் தொடர் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா நேற்று சந்தித்தார். அப்போது, மாநகராட்சி பகுதிகளில் பொதுக்கழிப்பிடங்களை முறையாக பராமரித்திடக்கோரியும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் மனு அளித்தார். அப்போது, உயிரிழந்த இளைஞரின் தாயார் சீலாதேவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.