நாகர்கோவிலில் அரசு பள்ளி வளாகத்தில் மாணவிகள் திடீர் போராட்டம் மதிப்பெண் இருந்தும் கேட்ட பாடப்பிரிவு வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு

நாகர்கோவிலில் அரசு பள்ளி வளாகத்தில் மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிப்பெண் இருந்தும் கேட்ட பாடப்பிரிவு வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டினர்.

Update: 2023-05-22 19:15 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் அரசு பள்ளி வளாகத்தில் மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிப்பெண் இருந்தும் கேட்ட பாடப்பிரிவு வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டினர்.

மாணவிகள் போராட்டம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி நாகர்கோவில் கவிமணி அரசு மகளிர் பள்ளியில் நேற்று பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.

இதனால் பள்ளியில் சேர ஏராளமான மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதலே குவிந்தனர். அப்போது அதே பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவிகள் சிலர் தங்களுக்கு மதிப்பெண் இருந்தும் பிளஸ்-1 கணக்கு பதிவியல் பிரிவு தர மறுக்கிறார்கள் எனக் கூறி பள்ளி வளாகத்திலும், பிறகு தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு அமர்ந்தும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் மாணவிகளின் பெற்றோரும் போராட்டத்தில் குதித்தனர்.

கேட்ட பிரிவு வழங்கவில்லை

இதுதொடர்பாக மாணவிகள் கூறுகையில், கவிமணி பள்ளியில் நாங்கள் அனைவரும் 2 முதல் 10-ம் வகுப்பு வரை படித்த மாணவிகள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 310 முதல் 350 வரை மதிப்பெண் பெற்று இருக்கிறோம். முக்கியமாக நாங்கள் அனைவரும் ஆங்கில வழியில் கல்வி கற்றவர்கள். எங்களது மதிப்பெண் அடிப்படையில் தகுதியான ஆங்கில வழி கல்வியில் கணக்குப்பதிவியல் பாடப்பிாிவு தர வேண்டும் என கேட்டு விண்ணப்பங்களை பள்ளியில் கொடுத்தோம்.

அப்போது எங்களது விண்ணப்பங்களை ஆசிரியர்கள் பெற்று கொள்ள மறுக்கின்றனர். மேலும் தனியார் பள்ளியில் இருந்து வரும் மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களது விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றனர். மதிப்பெண் இருந்தும் கேட்ட பிரிவில் சேர்க்க மறுப்பது வேதனை அளிக்கிறது. இதனால் நாங்கள் பெற்றோருடன் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் மதிப்பெண் அடிப்படையில் தகுதி உள்ள அனைவருக்கும் கேட்கும் பாடப்பிரிவு வழங்கப்படும் என கூறி மாணவிகளின் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் பெற்று கொண்டனர். இதனை தொடர்ந்து மாணவிகள், பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்