போலி டாக்டர் குடும்பத்துடன் திடீர் தலைமறைவு

திருக்கோவிலூர் அருகே விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு திடீரென தலைமறைவான போலி டாக்டரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2023-08-01 18:45 GMT

திருக்கோவிலூர்

போலி டாக்டர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் தனலட்சுமி நகரில் மருத்துவம் படிக்காத ஒருவர் மருந்து கடையில் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குறிப்பிட்ட மருந்து கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அப்பாவு மகன் பால்ராஜ்(வயது 54) என்பவர் என்ஜினீயரிங் படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

வழக்குப்பதிவு

இது குறித்து விழுப்புரம் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் லதா கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் பால்ராஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று முன்தினம் இரவு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

அதன்படி இரவு நேரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த பால்ராஜை மறுநாள்(அதாவது நேற்று) காலை வரும்படி போலீசார் கூறினர். இதையடுத்து பால்ராஜ் காலையில் விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

தலைமறைவு

பின்னர் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் பால்ராஜ் விசாரணைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தேடி தனலட்சுமி நகருக்கு சென்று போர்த்தபோது வீடு பூட்டி கிடந்ததை பாா்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பால்ராஜ் போலீசுக்கு பயந்து வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பது தொியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

இரவு நேரம் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வந்த பால்ராஜை நம்பிக்கையின் அடிப்படையில் போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தலைமறைவான சம்பவம் அரகண்டநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்