செங்கோட்டை அருகே குளத்தின் கரையில் திடீர் உடைப்பு
செங்கோட்டை அருகே குளத்தின் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர்:
செங்கோட்டை அருகே உள்ள மேக்கரையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக ஏராளமான ஹெக்டர் நிலம் உள்ளது. அங்கு விவசாயிகள் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வருகின்றனர். அங்குள்ள சவளைக்காரன் குளத்தின் கரை சிதிலமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த ெதாடர் மழையால் குளத்தின் கரையில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக அங்கு நெல் பயிரிட முடியாமல் போய் விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர் சுசிகரன், செயல் அலுவலர் பரமசிவன், திருவாடுதுறை ஆதீன மடத்தின் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி வேளாண்மை இயக்குனர் ஜோதிபாசு, உதவி வேளாண்மை அலுவலர் சம்சுதீன், துணை வேளாண்மை அலுவலர் பக்கீர் மைதீன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சுசிகரன் கூறுகையில், 'திருவாடுதுறை ஆதீன மடத்துக்கு சொந்தமான குளம் சிதிலமடைந்து உள்ளதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த குளத்தை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.