பள்ளி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவி படுகாயம்

பள்ளி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவி படுகாயமடைந்தார்.

Update: 2023-02-11 20:26 GMT

துறையூர்:

மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள பெரமங்கலம் ஊராட்சி மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரதிஷ்கா(வயது 10) மணியம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி பாடவேளை முடிந்த பின்னர், பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்பு நடைபெற்றது. அப்போது பள்ளி கட்டிட மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் திடீரென பெயர்ந்து பிரதிஷ்கா தலையில் விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவள் எழுந்து ஓட முயன்றபோது, தடுமாறி விழுந்ததில் கை, கால்களிலும் காயம் ஏற்பட்டது.

அதிகாரி ஆய்வு

இது குறித்து பிரதிஷ்காவின் தந்தை ரமேஷ் நேற்று கலெக்டர் பிரதீப்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். கலெக்டர் இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளிக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர், அந்த பள்ளிக்கு நேரில் சென்று கட்டிடத்தை ஆய்வு செய்து, மறு சீரமைப்பு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் அவர் மாணவி பிரதிஷ்காவை அருகில் உள்ள ஓமாந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை பெறச்செய்தார். தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக பிரதிஷ்காவின் பெற்றோரிடம் உறுதி கூறினார். ஆய்வின்போது லால்குடி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, முசிறி தாசில்தார் சண்முகப்பிரியா, வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிதாக கட்ட கோரிக்கை

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பெற்றோர்கள் கூறுகையில், இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவது, கட்டிடத்தின் உறுதித்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே விபரீதங்கள் ஏற்படும் முன்பு இந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்