அரை நிர்வாண போராட்டம் நடத்திய தொழிலாளியால் பரபரப்பு
அரை நிர்வாண போராட்டம் நடத்திய தொழிலாளியால் பரபரப்பு
நாகர்கோவில்:
நெய்யூர் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் பிள்ளை (வயது 58), தொழிலாளி. இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக வந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் கலெக்டர் அலுவலகத்தின் அருகே உள்ள சாலையோரம் திடீரென போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து போலீசார் சுந்தரம்பிள்ளையிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், எனக்கு சொந்தமான சொத்து ஒன்று திங்கள்சந்தை பகுதியில் உள்ளது. இதனை எனது சகோதரர் அபகரித்து விட்டார். இதனால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே எனது சொத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி போலீசார் சுந்தரம்பிள்ளையிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டு சென்றார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.