ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு: நீட் தேர்வு விலக்கு விஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது-ஓமலூரில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு என நீட் தேர்வு விலக்கு விஷயத்தில் இரட்டை வேடம் போடும் கட்சி தி.மு.க. என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்று ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2023-08-12 21:38 GMT

ஓமலூர்:

பேட்டி

ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மதுரை மாநாட்டு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. இளம் வயதில் கல்விக்கூடங்களில் இந்த சாதி சண்டையில் மாணவர்கள் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படுத்தும் இடம் கல்விக்கூடம். அந்த இடத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக வீட்டுக்கு சென்று தாக்கப்பட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது கண்டிக்கத்தக்கது.

காவிரி பிரச்சினை

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட அ.தி.மு.க. அரசு இருக்கின்ற காலத்தில் உச்சநீதிமன்றத்தின் மூலம் நிரந்தர தீர்ப்பு பெற்று உள்ளது. அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தீர்ப்பை பெற்று உள்ளோம். அதன் அடிப்படையில் மாதாந்திர கூட்டம் நடைபெறுகிறது.

கர்நாடக அரசு திட்டமிட்டு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப காவிரி மேலாண்மை வாரியம் நிர்ணயித்த அளவில் தண்ணீரை திறந்து விட மறுக்கிறது. இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி குறிப்பிட்ட ேநரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீரை திறந்து விட்டால் மட்டும் போதாது, இறுதிவரை விவசாயத்திற்கு பாசனத்திற்கு தடை இல்லாமல் திறந்து விட்டால் தான் விளைச்சல் பெறும்.

எதிர்க்கட்சிகள் கூட்டம்

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக கர்நாடக மாநிலம் பெங்களூவில் சமீபத்தில் கூட்டம் நடத்தின. அதில் கலந்து கொள்ள டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், உயர் அதிகாரிகள் நியமனம், மாற்றம் குறித்த மசோதாவில் எங்களை ஆதரவளித்தால் கலந்து கொள்வதாக நிபந்தனை விதித்தார். இதையடுத்து அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

அதேபோல் மு.க.ஸ்டாலின் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை வைத்திருந்தால் எளிதாக நிறைவேறி இருக்கும். அங்கு பேச எவ்வளவு நேரம் ஆகும்? கூட்டணி கட்சி முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியிடம் பேசுவதை விடுத்து கடிதம் எதற்காக எழுத வேண்டும். தமிழக விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், அந்த கூட்டத்தில் கோரிக்கை வைத்திருந்தால் நிறைவேறி இருக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும்.

இழப்பீடு கொடுக்க வேண்டும்

மேட்டூர் அணையில் 10 நாட்களுக்கு தான் பாசனத்திற்கு தண்ணீர் இருக்கும் என செய்திகள் வருகிறது. தற்போது திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து விட்டனர். வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டால் தான் கடைமடைக்கு தண்ணீர் போகும். ஏற்கனவே திறந்துவிட்ட தண்ணீரை நம்பி விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் தற்போது காய்ந்து கொண்டு உள்ளது. அதற்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும்.

இந்த கூட்டணி எப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும். உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. இவர்கள் வெற்றி பெற்ற பின் எப்படி நாட்டுக்கு நன்மை கிடைக்கும்.

இரட்டை வேடம் போடும் கட்சி

தேர்தல் நேரத்தில் இன்றைய முதல்-அமைச்சரும், அப்போதைய எதிா்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பேசும் போது, நீட் தேர்வு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானவுடன் முதல் கையெழுத்து போடுவார் என்று சொன்னார். மக்களை ஏமாற்றி வாக்கு பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்பு நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை அந்த தேர்வை நடத்த அனுமதிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.

ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடும் கட்சி தி.மு.க. என்பது நிரூபணம் ஆகிவிட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எப்படி வாங்கினோம். அந்த மாதிரி வாங்க தில் உள்ளதா? நாடாளுமன்றத்தை நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முடக்க முடிந்ததா?

காவிரி பிரச்சினையில் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு எங்களது செயல்பாடு இருந்தது. எங்கள் கூட்டணி கட்சி ஆட்சி செய்த போதும் நாங்கள் மக்களுக்காக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு நாங்கள் செயல்பட்டு இருந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து டி.டி.வி. தினகரன் வடமாவட்டங்களில் பா.ம.க. ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'அவர் என்ன வேணும்னாலும் பேசுவார். அவர் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஊடகங்களில் தான் கட்சி நடத்தி வருகிறார்' என்றார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் செம்மலை, டெல்லி மேல்-சபை எம்.பி. சந்திரசேகரன், சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் மணி, சுந்தர்ராஜன், நல்லதம்பி, ஜெய்சங்கரன், ராஜமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்