டெல்லியில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரர் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்
டெல்லியில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவர் பயணம் செய்தார். இவர், டெல்லியில் விமானம் புறப்பட தயாராக இருந்தபோது அவசர கால கதவை திறக்க முயன்றதாக தெரிகிறது.
இதுபற்றி சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அதன்படி டெல்லி விமானம், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியதும், மணிகண்டனை மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் மணிகண்டன், ராணுவ வீரர் என்பதும், உத்தரபிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. மேலும் அவர், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்க்க விமானத்தில் வந்ததும், அப்போது தவறுதலாக விமானத்தின் அவசர கால கதவில் கைப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
பின்னர் அவரை மேல் நடவடிக்கைக்காக விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராணுவ வீரர் மணிகண்டன், போலீசாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். இதையடுத்து அவரை எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.