பீரோவில் புகுந்த பாம்பால் பரபரப்பு
குடுமியான்மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பீரோவிற்குள் புகுந்த விஷ பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாம்பு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், குடுமியான்மலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்குள் விஷப்பாம்பு புகுந்ததாக அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
அதன் பின்னர் ஊராட்சி பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அந்த விஷப்பாம்பு அலுவலகத்திற்குள் இருந்த பதிவேடுகள் வைக்கப்படும் பீரோவிற்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களால் அந்த விஷப்பாம்பை பிடிக்க முடியவில்லை.
பரபரப்பு
இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அலுவலகத்திற்குள் இருந்த பீரோவை வெளியே எடுத்து வந்து பொருட்களை அப்பறப்படுத்தினர்.
அப்போது பீரோவில் இருந்த விஷப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்புதுறையினர் விஷப்பாம்பை உயிருடன் பிடித்து சாக்குப்பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.