ஒற்றை யானை அட்டகாசம்
களக்காடு அருகே ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருகிறது
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், சத்திரங்காடு, தலையணை மலையடிவார பகுதிகளான கள்ளியாறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை இரவில் உணவுக்காக விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சிதம்பரபுரம் சத்திரங்காடு பகுதியில் நுழைந்த ஒற்றை யானை அங்கிருந்த 3-க்கும் மேற்பட்ட பனை மரங்களை சாய்த்து அதன் குருத்துகளை தின்றுள்ளது. மேலும் அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து தென்னை மரங்களையும் சாய்த்துள்ளது. அத்துடன் அங்கிருந்த பனம் பழங்களையும் தின்றுள்ளது. பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பனை, தென்னை மரங்களை நொடிப் பொழுதில் யானை சாய்த்ததை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
இதுபற்றி விவசாயி செந்தில் கூறியதாவது:- யானையின் அட்டகாசத்தால் இதுவரை 20-க்கும் மேற்பட்ட பனை மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் விவசாயிகளின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. நாசமான பனை, தென்னை மரங்களுக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. யானையினால் உயிர் சேதம் ஏற்படும் முன் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுபோல யானை சாய்த்த தென்னை பனை மரங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.