திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரே வகுப்பறையுடன் இயங்கும் பள்ளியால் மாணவர்களின் கல்வி பாதிப்பு வராண்டாவில் அமர்ந்து படிக்கும் அவலம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரே வகுப்பறையுடன் இயங்கும் பள்ளியால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே பூசாரிப்பாளையம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தற்போது அப்பகுதியை சேர்ந்த 66 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முறையான பாராமரிப்பு இல்லாத காரணத்தால், பள்ளியில் இருந்த 2 கட்டிடத்தில் ஒரு கட்டிடம் பலத்த சேதமடைந்தது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், மாணவர்கள் நலன் கருதி அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி பள்ளியில் இருந்த பழுதடைந்த அந்த கட்டிடம் கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டன.
மரத்தடியில் வைத்து...
ஆனால் இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு பதில் புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளியில் தற்போது மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லை. இதன் காரணமாக மாணவர்களை பள்ளி வளாகத்திலும், மரத்தடியிலும், வராண்டாவிலும் அமர வைத்து ஆசிரியர்கள் கல்வி கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுவதால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலத்தில் பள்ளியில் உள்ள ஒரே வகுப்பறையில் 66 மாணவர்களையும் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முறையாக பாடம் சொல்லி கொடுக்க முடியாமல் ஆசிரியர்களும், சரியாக கல்வி கற்க முடியாமல் மாணவர்களும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆசிரியர் பற்றாக்குறை
மேலும் இப்பள்ளியில் 3 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 2 ஆசிாியர்கள் மட்டுமே உள்ளனர். இதில் ஒரு ஆசிரியர் விடுமுறை எடுத்தாலோ அல்லது அலுவல் பணி காரணமாக சென்று விட்டாலோ மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதை தவிர்க்க பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டித்தரக்கோரியும், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கோரிக்கை
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், போதிய கட்டிட வசதி இல்லாததால், ஒரு கட்டிடத்தில் 66 மாணவர்களை வைத்து பாடம் சொல்லி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் சரியாக பாடங்களை கவனிக்கிறார்களா என ஆசிரியர்களுக்கு தெரிவதில்லை. மேலும் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை சரியாக கவனிக்க முடியாமல் மாணவர்களும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மாணவர்கள் சிறந்த கல்வியை பெற வேண்டும் என்பதற்காகதான் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் பூசாரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் கட்டிட வசதி இல்லாததால், மாணவர்கள் சிறந்த கல்வியை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தரவும் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.