நம்பியூர் அருகே அடுத்தடுத்து சம்பவம் 3 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

பணம் கொள்ளை

Update: 2022-11-20 19:30 GMT

நம்பியூர் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

3 கோவில்கள்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையம் பகுதியில் வீரமாத்தி அம்மன், மருதகாளியம்மன் மற்றும் வல்ல கருப்பராயன் கோவில்கள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை பக்தர்கள் வல்ல கருப்பராயன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோவிலின் முன்பகுதியில் நடப்பட்டு இருந்த வேலை காணவில்லை. மேலும் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வேல் கிடந்தது. அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உண்டியல்கள் உடைப்பு

அதேபோல் அருகே உள்ள வீரமாத்தி அம்மன், மருதகாளியம்மன் கோவில்களின் உண்டியல்களும் உடைக்கப்பட்டிருந்தது. உடனே இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு பக்தர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர். பின்னர் இதுபற்றி நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கோவிலுக்குள் வந்துள்ளனர். அதன்பின்னர் கோவில் முன்பகுதியில் நடப்பட்டு இருந்த வேலை எடுத்து அதன் மூலம் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியல்களையும் வேல் மூலம் உடைத்து திறந்து அதில் இருந்த பணத்தை திருடியுள்ளனர். அதன்பின்னர் வேலை கோவிலின் உள்ளேயே வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

வலைவீச்சு

வல்ல கருப்பராயன் கோவில் உண்டியலில் ரூ.20 ஆயிரம் இருக்கலாம் எனவும், வீரமாத்தி மற்றும் மருதகாளியம்மன் கோவிலில் சுமார் 4 ஆண்டுகளாக உண்டியல் திறக்காமல் இருந்ததால் அவற்றில் தலா ரூ.1 லட்சம் இருக்கலாம் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து 3 கோவில்களில் திருட்டு நடந்துள்ளதால் இந்த 3 கோவில்களிலும் கைவரிசை காட்டியது ஒரே கும்பலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரேநாளில் அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்