ஓட்டல்களில் இருந்து செஸ் வீரர்களை சொகுசு பஸ்சில் பாதுகாப்பாக அழைத்து வந்து அனுப்புவது குறித்த ஒத்திகை

ஓட்டல்களில் இருந்து செஸ் வீரர்களை சொகுசு பஸ்சில் பாதுகாப்பாக அழைத்து வந்து அனுப்புவது குறித்த ஒத்திகையை போலீசார் நடத்தினர்.;

Update: 2022-07-28 08:29 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டி நடைபெறும் போர் பாயிண்ட் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டு பயணிகளை தினமும் குளிர்சாதன பஸ்சில் அழைத்து வந்து, போட்டி நடைபெறும் வளாகத்தில் பஸ்சை எந்த இடத்தில் நிறுத்தி, மெட்டல் டிடெக்டர் கருவியுடன் உள்ள 30 நுழைவு வாயில் பகுதியில் எந்த வழியாக அழைத்து செல்வது, போட்டி முடிந்தவுடன் எந்த வழியாக அழைத்து வந்து மீண்டும் ஓட்டலுக்கு அழைத்து செல்வது என்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் தீயணைப்பு துறையினர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீசார் முன்னிலையில் ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகையில் செஸ் வீரர்கள் போல போலீசார் 400 பேர் பஸ்சில் நடித்து காட்டினர். செஸ் வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் போட்டி அரங்குக்குள் சென்றவுடன் அவர்கள் வந்த பஸ்களை எந்த இடத்தில் வரிசையாக நிற்க வைப்பது போன்று, அவர்கள் வந்த பஸ்களை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், செங்கல்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் திருவள்ளுவன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் செல்வராஜ் உள்ளிட்ட வெளி மாவட்ட போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட 400 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்