வேலூர் கோட்டையில் தத்ரூபமாக ஒளிபரப்பப்பட்ட 3டி நிகழ்ச்சி
சோதனை முறையில் வேலூர் கோட்டையில் தத்ரூபமாக 3டி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.;
3டி நிகழ்ச்சி
வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஒளி, ஒலியுடன் கூடிய 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி நவீன தொழில்நுட்பத்துடன் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பெரியார் பூங்காவில் பெரிய அளவிலான 2 புரஜெக்டருடன் கூடிய பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டது. இதற்காக ரூ.5 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இந்த 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி சோதனை ஓட்டமாக ஊழியர்கள் ஒளிபரப்பி பார்த்தனர்.
அப்போது இருள் சூழ்ந்த கோட்டையின் மதில்சுவரின் படக்காட்சிகள் திரையிடப்பட்டது. அதில், வேலூர் வரலாறு வசீக குரலில் எடுத்துரைக்கப்பட்டது. கோட்டை மதில்சுவர் கட்டப்படுவது போன்றும். பின்னர் இடிந்து விழுவது போன்றும், குண்டுகள் சுவரை துளைப்பது போன்றும், பீரங்கிகள் சுவரில் இருந்து வெளியே வருவது போன்றும் வீடியோ அமைந்திருந்தது. மேலும், வேலூர் கோட்டை வரலாறு சார்ந்த படங்கள் மற்றும் அதுகுறித்த வீடியோ சுவரில் ஒளிபரப்பப்பட்டது. அவை கண்முன்னே தோன்றும் வகையில் மிக தத்ரூபமாக இருந்தது.
விரைவில்...
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. கோட்டையின் மதில் சுவர் திரையாக பயன்படுத்தப்படுகிறது. அதில் வேலூரின் வரலாறு சார்ந்த நிகழ்வுகள், படங்கள் மற்றும் வீடியோ 3டி முறையில் ஒளி, ஒலியுடன் ஒளிபரப்பப்படும். சோதனை ஓட்டம் முடிவடைந்துள்ளது. நேரடியாக அதிகாரிகள் கள ஆய்வு செய்து, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனர்.