பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Update: 2022-09-19 07:07 GMT

சென்னை,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேசுவரன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பு பள்ளிக்கூட மாணவர்கள் தின்பண்டம் உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்றனர். அப்போது அவர்களுக்கு பொருட்களை வழங்க மறுத்த மகேசுவரன், அதனை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் இதுவரை 2பேர் கைது செய்யப்பட்டு, 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டதோடு, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தந்தி டிவி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தென் மாவட்டங்களில் கல்வியறிவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்