மனைவி, 6 வயது மகனுடன்தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி

கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தனது மனைவி மற்றும் 6 வயது மகனுடன் தனியார் தங்கும் விடுதியில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஓமலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-09-25 19:40 GMT

ஓமலூர்:-

கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தனது மனைவி மற்றும் 6 வயது மகனுடன் தனியார் தங்கும் விடுதியில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஓமலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தின்னப்பட்டி மாமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 33). இவருடைய மனைவி திவ்யா (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரதீஸ்(6) என்ற மகன் உள்ளான்.

சதீஷ்குமார் திருச்சியில் உள்ள டயர் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவரின் செல்போனுக்கு கடன் செயலி ஆப் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சம் கடன் வாங்கினால் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி எனக்கூறி தகவல் வந்துள்ளது. இதனை நம்பி தின்னப்பட்டியில் உள்ள தனியார் பிரவுசிங் சென்டரில், அவரது ஆதார் கார்டு மற்றும் ஆவணங்களை அந்த செயலில் கூறிய இணைய முகவரிக்கு அனுப்பி உள்ளார்.

ஆனால் ரூ.40 ஆயிரம் மட்டுமே அவரது வங்கி கணக்கு பணம் வந்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் கடன் கொடுப்பதாக கூறி அந்த தனியார் கடன் செயலி மீண்டும், மீண்டும் பணம் கொடுத்து பழைய கடனை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கடன் தொகை ரூ.2 லட்சம் வரை வந்த நிலையில் அவர்கள் கடனை செலுத்த நெருக்கடி கொடுத்துள்ளனர்.

தற்கொலை முயற்சி

இதனால் மனம் உடைந்த சதீஷ்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு தின்னப்பட்டிக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் சதீஷ்குமார், அவருடைய மனைவி திவ்யா, மகன் பிரதீஸ் உடன் ஓமலூர் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். அங்கு இரவில் சதீஷ்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து தான் வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரையை மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் தின்று தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர் சதீஷ்குமார், தனது தம்பி சுரேசுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். தகவல் அறிந்து விடுதிக்கு விரைந்து சென்ற சுரேஷ், அறையில் மயங்கி நிலையில் கிடந்த அண்ணன், அண்ணி மற்றும் சிறுவன் பிரதீசை மீட்டு ஓமலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் மற்றும் சேலம் சைபர் கிரைம் போலீசார் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் தின்னப்பட்டியில் உள்ள தனியார் பிரவுசிங் சென்டரில் சதீஷ்குமார் கடன் வாங்க ஆவணங்களை அனுப்பிய இணையதள முகவரி மற்றும் வாங்கிய கடனில் தவணைத்தொகையை திருப்பி செலுத்திய அவர்களுடைய வங்கி கணக்கு, மெயில் முகவரி போன்ற விவரங்கள் தொடர்பாக விசாரித்தனர்.

மேலும் சதீஷ்குமார் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு அதிலும் பணத்தை இழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்