திடீரென அறுந்து சாலையில் விழுந்த மின்கம்பி; தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு

திடீரென அறுந்து சாலையில் விழுந்த மின்கம்பி; தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு

Update: 2023-07-20 19:51 GMT

தஞ்சையில் திடீரென மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. இதையடுத்து அருகில் யாரும் செல்லாமல் இருக்கும் வகையில் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அரைமணி நேரத்தில் அதனை சரி செய்தனர்.

எம்.கே.மூப்பனார் சாலை

தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து எம்.கே.மூப்பனார் சாலை வழியாக சாந்தப்பிள்ளை கேட் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, நீடாமங்கலம், அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, மாரியம்மன்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் இந்த வழியாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் சென்று வருகிறார்கள். இந்த சாலையில் தலைமை தபால் நிலையம், நீர்வளத்துறை அலுவலகங்கள் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மின்கம்பி அறுந்து விழுந்தது

ரெயில் நிலையத்தில் இருந்து இந்த சாலையில் வந்து சாந்தப்பிள்ளை கேட் பகுதிக்கு திரும்பும் பகுதியில் நேற்று மதியம் 2 மணி அளவில் காற்று பலமாக வீசிய போது மின்கம்பி திடீரென அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்களும், பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மின்கம்பி அறுந்து விழுந்த இடத்துக்கு வந்தனர். மேலும் மின்கம்பி அறுந்து விழுந்த இடம் வளைவான பகுதி என்பதாலும், வாகனங்கள் அடிக்கடி செல்வதாலும் உடனடியாக அருகில் யாரும் செல்லாமல் இருப்பதற்காக இரும்பு தடுப்புக்கம்பிகளை கொண்டு பாதுகாப்பு அரண் அமைத்தனர். மேலும் மின்சப்ளையையும் துண்டித்தனர். மேலும் அந்த வழியாக வாகனங்களும் மெதுவாக சென்று வந்தன.

அரைமணி நேரத்தில் சரி செய்தனர்

இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அறுந்த கம்பியை இணைத்ததோடு, அதனை மின்கம்பத்தில் ஏறி பொருத்தினர். கம்பி அறுந்து விழுந்த அரைமணி நேரத்தில் அதனை மின்ஊழியர்கள் சரி செய்தனர். இதையடுத்து சாலையில் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு அரண்களையும் அகற்றினர். அதன் பின்னர் வாகனங்கள் வழக்கம் போல சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்