நடைபாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர்
நடைபாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர்
பந்தலூர்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு அருகே காமாராஜ் நகரில், நெலாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரின் வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதை இருக்கிறது. இந்த நடைபாதையை ஒட்டி வீட்டுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தொடங்கியது. ஆனால் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக பந்தலூர் தாசில்தார் நடேசனுக்கு புகார் சென்றது. உடனே வருவாய்த்துறையினர் நில அளவை செய்து, சுற்றுச்சுவர் கட்ட தடை விதித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, பந்தலூர் தாசில்தார்(பொறுப்பு) குப்புராஜ், வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று அந்த பகுதியின் நில வரைபடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வாளர் ராஜகோபால், நில அளவை செய்தார். அதில், நடைபாதையை குறிப்பிட்ட தூரம் வரை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டுவது தெரியவந்தது. அந்த இடத்தை மட்டும் இடித்து அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதை தாமாக அகற்றுவதாக ஊராட்சி மன்ற தலைவரின் தரப்பினர் தெரிவித்தனர். இதனால் நடைபாதை பிரச்சினை முடிவுக்கு வந்தது.