தூத்துக்குடி விமான நிலையத்தில் 600 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையம்

தூத்துக்குடி விமான நிலையத்தை தரம் உயர்த்தும் பணி அடுத்த ஆண்டு முடிவடையும், 600 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையம் அமைக்கப்படுகிறது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-09-09 20:37 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இங்கிருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்கவும், ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு புதிதாக விமான சேவையை தொடங்கவும் தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இதைத்தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசு ரூ.321 கோடி நிதி ஒதுக்கியது. தற்போது அங்கு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

புதிய முனையம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகள் மற்றும் நவீன வசதிகள் குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி விமான நிலையத்தில் 13 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 600 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டுமானம் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இங்கு சிறிய வகை விமானங்கள் மட்டுமே வந்து செல்லும் ஓடுதளம் மட்டுமே இருந்து வரும் நிலையில் பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

செட்டிநாடு அரண்மனை தோற்றம்

அதேபோன்று ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் கோபுரம், தொழில்நுட்ப கட்டிடம், தீயணைப்பு நிலையம் போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைக்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கார் பார்க்கிங் வசதி, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு பயன்படுத்தும் 2 ஏரோ பிரிட்ஜ், புதிய இணைப்பு சாலை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் பயணிகளுக்கு தேவையான அத்தனை வசதிகளுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடமான செட்டிநாடு அரண்மனை போன்ற தோற்றத்துடன் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தின் முகப்பு அமைக்கப்பட உள்ளது.

ஏ-321 ரக விமானம்

தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலையை புதிய முனையத்தின் கட்டிடம் வெளிப்படுத்தும் வகையிலும், கட்டிடத்தின் உட்புறங்கள் தூத்துக்குடி நகரின் சிறப்புகள் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் உருவாக்கப்படுகிறது.

இந்த கட்டிடம் நான்கு நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய கட்டிடமாக புதிய அம்சங்களுடன் இருக்கும். ஏ-321 ரக விமானங்களை இயக்கும் வகையில் தற்போதுள்ள ஓடுபாதைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏ-321 ரக விமானங்களை பொறுத்தமட்டில் இதுபோன்ற 5 விமானங்களை நிறுத்தும் வகையில் தளங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வர்த்தகம், சுற்றுலா மேம்படும்

தூத்துக்குடி விமான நிலையத்தை தரம் உயர்த்துவது உள்ளூர் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டங்களின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும்.

தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்க பணி அடுத்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் நிறைவடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்