புதிய தாலுகா உருவாக்க வேண்டும்

ஆலங்காயத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-12-26 17:45 GMT

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தமையில் நடந்தது. இதில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். மொத்தம் 305 மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தனித்தாலுகா...

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்த மனுவில் வாணியம்பாடி தாலுகாவை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து, ஆலங்காயத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருவதால், திருப்பத்துர், ஆலங்காயம், மாதனுர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஓடைகளில் தடுப்பணை அமைத்து தண்ணீரை தேக்கி விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவிகள், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.88 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரங்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1400 மதிப்பில் 2 கைதாங்கிகள் என மொத்தம் 32 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்