ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிதாக இணைப்பு சாலை வசதி ஏற்படுத்தப்படும்அமைச்சர் முத்துசாமி தகவல்
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிதாக இணைப்பு சாலை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிதாக இணைப்பு சாலை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
அமைச்சர் ஆலோசனை
தமிழக வீட்டுவசதித்துறை, மதுவிலக்கு -ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஈரோட்டில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். ஈரோடு தந்தை பெரியார் தலைமை ஆஸ்பத்திரிக்கு வந்த அவர், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக இணைப்பு சாலை அமைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் திட்ட மாதிரி வரைபடத்தை அமைச்சர் பார்வையிட்டு அதுபற்றி கேட்டு அறிந்தார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக நவீன கட்டிடங்கள் கட்ட மதிப்பீடு செய்யும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
டயாலிசிஸ் மையம்
இதனால் அங்குள்ள டயாலிசிஸ் மையத்தை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதை உணர்ந்து கொண்ட அமைச்சர், உடனடியாக ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் அக்னி எம்.சின்னச்சாமி, நிர்வாகிகள் சி.டி.வெங்கடேஸ்வரன், எம்.சி.ராபின் ஆகியோரை அழைத்து மாற்று ஏற்பாடுகளை செய்யும் படி கேட்டுக்கொண்டார். இந்த மையத்தை பொதுமக்களுக்கு இலவசமாக ஒளிரும் ஈரோடு அமைப்பு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு சாலை
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:-
ஈரோட்டில் மேம்பாலம் கட்டியபோது போதிய இணைப்பு சாலை அமைக்கப்படாததால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. எனவே புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக இடம் கையகப்படுத்தப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கும்.
இதுபோல் மத்திய அரசின் தரச்சான்றினை பெற அனைத்து வசதிகளும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ளன. தரச்சான்று பெறுவதன் மூலம் மத்திய அரசின் நிதியை பெற்று ஆஸ்பத்திரியை மேம்படுத்த முடியும். எனவே அதுபற்றியும் ஆய்வுகள் செய்யப்பட்டது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியின் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதியதாக 2 கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 4 கட்டிடங்களுக்குள் அரசு ஆஸ்பத்திரி மிக சிறப்பாக செயல்படும் வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
விண்ணப்பங்கள்
இந்த ஆய்வுப்பணியின் போது ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாநகர பொறியாளர் விஜயகுமார், இளநிலை பெறியாளர் சந்திரசேகரன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அம்பிகா, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேசன், உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் கவிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் சேகர், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் சரவணன், மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி, தாசில்தார் ஜெயக்குமார், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைசெயலாளர் ஆ.செந்தில்குமார், மாநகராட்சி மண்டல தலைவர் பி.கே.பழனிச்சாமி, பகுதி செயலாளர் ராமு என்கிற பொ.ராமச்சந்திரன், நிர்வாகிகள் மணிராசு, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு செங்குந்தர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான முகாமை பார்வையிட்டு் ஆய்வு செய்தார். அதன்பிறகு அமைச்சா் சு.முத்துசாமி கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,207 ரேஷன் கடைகள் மூலமாக 7 லட்சத்து 67 ஆயிரத்து 316 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. 2 கட்டங்களாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அதை பதிவேற்றம் செய்யும் பணியும் நடக்கிறது", என்றார்.