வகுப்பறையில் மாணவியை கட்டி வைத்த தாய்

கே.வி.குப்பத்தில் பள்ளிக்கு சரியாக செல்லாத மாணவியை, அவரது தாயே வகுப்பறையில் கட்டிவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தினார்.

Update: 2023-10-13 17:21 GMT

சரியாக வருவதில்லை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியை மற்றும் 2 இடைநிலை ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 3 மாதங்களாக பள்ளிக்கு சரியாக வருவதில்லை. கட்டாயப்படுத்தி பள்ளியில் கொண்டு விட்டாலும் ஆசிரியைகளுக்கு தெரியாமல் பள்ளியை விட்டு வெளியேறி விடுவதும், வீட்டிற்கு போகாமல் வழியில் சுற்றித்திரிவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளாள்.

வகுப்பறையில் கட்டி வைத்தார்

இதனால் தனது மகள் பள்ளியைவிட்டு தனியாக வெளியே வராமல் இருப்பதற்காகவும், பயமுறுத்தி நல்வழிபடுத்துவதற்காகவும் மாணவியின் தாயே, பள்ளி வகுப்பறைக்குள், ஜன்னல் கம்பியில் சணல் கயிறு மூலம் மாணவியின் வலது கையை கட்டிவைத்துள்ளார்.

இதனை ஆசிரியை ஒருவர் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து செய்தி சேனலுக்கு அனுப்பி ஒலிபரப்பாகி இருக்கிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், தாசில்தார் டி.கலைவாணி, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், வட்டார கல்வி அலுவலர் பா.சுமதி, வருவாய் ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்கு செனறு சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணை

மேலும் துறை சார்ந்த விசாரணைக்காக மாணவி, அவரது தாய், தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் அனைவரும் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

விளையாட்டாக நடந்த கண்டிப்பு விபரீதமானதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்