சென்னையில் இருந்து செங்கல்பட்டு சென்ற மின்சார ரெயிலில் பைக்குள் வைத்து பெண் குழந்தையை விட்டுச்சென்ற தாய்

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு சென்ற மின்சார ரெயிலில் பைக்குள் வைத்து பெண் குழந்தையை விட்டு சென்ற தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-11-04 09:41 GMT

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு மின்சார ரெயில் வந்தது. பெண்களுக்கான ரெயில் பெட்டியில் அனைத்து பயணிகளும் இறங்கிய பிறகு ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் லதா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த பெட்டியில் குழந்தை அழும் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த லதா, கேட்பாறற்று கிடந்த துணியிலான கட்டைப்பையை சோதனை செய்தார்.

அந்த பையில் ஒரு பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த லதா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப் -இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், பாக்யஜோஸ், போலீஸ் ஏட்டு குமாரவேல் ஆகியோர் குழந்தையை மீட்டு உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அந்த குழந்தை பிறந்து 5 நாட்கள் மட்டுமே ஆவதாகவும், குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை, குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த குழந்தையை மின்சார ரெயிலில் எந்த ரெயில் நிலையத்தில் வைத்து போட்டு விட்டு சென்றனர். குழந்தையை அனாதையாக போட்டுவிட்டு சென்ற தாய் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்