கடைக்குள் புகுந்து தின்பண்டங்களை தூக்கி செல்லும் குரங்கு
வடமதுரை பகுதியில் கடைக்குள் புகுந்து தின்பண்டங்களை தூக்கி சென்று குரங்கு அட்டகாசம் செய்து வருகிறது. கூண்டு வைத்து பிடிக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
வடமதுரை பகுதியில், கடந்த 2 மாதங்களாக ஒற்றை குரங்கு ஒன்று சுற்றி வருகிறது. இது வீடுகளில் உள்ள பெண்கள் மற்றும் முதியோரை அச்சுறுத்தும் வகையில் அலைந்து திரிகிறது. இதுமட்டுமின்றி கடை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை தூக்கி செல்கிறது. பள்ளி குழந்தைகள் கொண்டு செல்லும் உணவு பொருட்களையும் பறித்து சென்று விடுகிறது. அந்த குரங்கை யாராவது விரட்ட முயன்றால் கூர்மையான பற்களை காட்டி, கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் வடமதுரை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மருந்துக்கடைக்குள் நேற்று அந்த குரங்கு புகுந்தது. பின்னர் அங்கிருந்த மிட்டாய் டப்பாவை தூக்கியது. இதனைக்கண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து, குரங்கை விரட்டினார். ஆனால் அந்த குரங்கு, மிட்டாய் டப்பாவுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
மருந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சி பதிவானது. இது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே வடமதுரையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அச்சுறுத்துகிற ஒற்றை குரங்கை கூண்டு வைத்த பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.