பாளையங்கோட்டை சிறையில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-04 11:48 GMT

நெல்லை,

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்தார். பின்னர் அங்கு ஆய்வு செய்தார். சிறையில் கைதிகளின் அறைகள், உணவுக் கூடம், கைதிகள் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் கூடம், விவசாய நிலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். அடிப்படை வசதிகள், தேவையான வசதிகள் குறித்தும் சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு விசாரணை கைதி, தண்டணை கைதி என மொத்தம் 1,378 கைதிகள் உள்ளனர். ஆனால் இங்கு 1,332 கைதிகளுக்குத்தான் இடம் உள்ளது. கூடுதலாகவே கைதிகள் உள்ளனர்.

தமிழகத்தில் சிறைகள் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் நவீன வசதியுடன் இருக்க வேண்டும். திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்க வேண்டும். கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆகையால் நவீன வசதியுடன் பல இடங்களில் சிறைச்சாலைகளில் புதிய கட்டிங்களாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் குறைவாக உள்ளனர். அந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வரியம் மூலம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இருந்த பகுதியை பார்வையிட்டோம். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் இருந்த பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் முதல்-அமைச்சர் அனுமதியுடன் நினைவு சின்னம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீண்டகாலம் சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது தொடர்பாக அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் உள்ளது. கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதன்பின்பு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்