கஞ்சா கடத்தலில் இடைத்தரகராக செயல்பட்டவர் கைது

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கஞ்சா கடத்தலில் இடைத்தரகராக செயல்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-09 19:00 GMT

வேடசந்தூர் அருகே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒரு லாரியில் 215 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை, திண்டுக்கல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி மற்றும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த காக்கிவீரன்பட்டியை சேர்ந்த ராஜா என்ற புதுராஜா (வயது 42) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதில் ராஜா என்ற புதுராஜா மீது திண்டுக்கல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் என மொத்தம் 8 கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதையடுத்து 3 பேரையும் கைது செய்யும்படி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா உத்தரவிட்டார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையிலான தனிப்படை போலீசார் 3 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜா என்ற புதுராஜா நேற்று முன்தினம் திண்டுக்கல்லுக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை வியாபாரிகளுக்கு மாற்றிவிடும் இடைத்தரகராக அவர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை மதுரை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்