ஈரோட்டில் நீண்டகாலமாக உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஈரோட்டில் நீண்டகாலமாக உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா?; என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனா்.

Update: 2022-12-09 21:49 GMT

ஈரோடு மாநகராட்சி பரந்து விரிந்து 60 வார்டுகளாக உள்ளது. பழைய ஈரோடு நகராட்சி பகுதிகள் தவிர, பிற அனைத்து பகுதிகளும் கிராமம் சார்ந்தவையாகவே உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்தாலும் எதுவும் முற்றுபெறவில்லை என்ற நிலையே உள்ளது.

கோரிக்கைகள்

குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், சாலைகள் மேம்பாட்டு பணி, ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் என்று வளர்ச்சித்திட்ட பணிகள் எதுவும் முழுமைபெறாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது.

சாயக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டுகாலமாக உள்ளது. பொழுதுபோக்கு மையங்கள் எதுவும் இல்லாத மாநகரமாக ஈரோடு உள்ளது. போக்குவரத்து நெரிசல், குறுகிய சாலைகள், விரிவாக்கம் செய்யப்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமை என்று தேவைகளின் மத்தியில்தான் பொதுமக்கள் இருக்கிறார்கள்.

அத்தியாவசிய தேவைகளை விரைவாக செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

போக்குவரத்து நெரிசல்

இதுபற்றி ஈரோடு கோட்டை பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் கூறியதாவது:-

ஈரோடு மாநகரின் மிக முக்கிய பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. பன்னீர்செல்வம் பூங்கா, சுவஸ்திக் கார்னர், காளைமாட்டுச்சிலை என இந்த முக்கிய பகுதிகளை சுற்றியே மாநகரின் வளர்ச்சி இருக்கிறது. புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகளும், பொதுமக்களும் பரந்து விரிந்து செல்ல தயங்குகிறார்கள். சாலைகள் மிக குறுகலாகவே இருக்கின்றன. ஈரோட்டில் மட்டும் மாதம் ஒன்றுக்கு புதிதாக 700 முதல் 1000 வரை வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருந்தாலும் நகரின் விரிவாக்கம் வேகமாக இல்லை. காளைமாடு சிலை ரெயில்வே நுழைவு பாலம், சென்னிமலை ரோடு கலைஞர் கருணாநிதி நகர் ரெயில்வே நுழைவுபாலம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த சாலைப்பகுதிகள் வளர்ச்சி வேகத்தில் குறைவாகவே இருக்கின்றன. இங்கு மேம்பாலங்கள் அமைத்தால் நகரம் விரிவாகும்.

ஈரோடு மாநகர் பகுதியில் வாகன நிறுத்தும் இடங்கள் இல்லை. சாலையோரங்களிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தற்போது ஸ்மார்ட் சிட்டியின் பெயரால் பல சாலைகளில் சுமார் 12 அடி அகலத்துக்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நடைபாதைகள் பொதுமக்கள் நடந்து செல்ல போதிய வசதி இல்லாமல் இருப்பதுடன், சாலையின் பெரும்பங்கு இடத்தை அடைத்துக்கொள்கிறது. இதனால் இங்கு ஒரு வாகனத்தை நிறுத்தினாலே பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபோன்ற இடங்களை கண்டறிந்து வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளை செய்ய வேண்டும். மாநகர் பகுதிகளில் பயனற்று கிடக்கும் அரசுத்துறை நிலங்களை வாகன நிறுத்தங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன், இறைச்சிக்கடைகள் ஒரே வளாகத்தில் வாகன நிறுத்த வசதியுடன் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் ஓரளவு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குடிநீர்-சாக்கடை

விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் எம்.பாலாஜி கூறியதாவது:-

சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். சாய மற்றும் தோல் கழிவுகள் காலிங்கராயன் வாய்க்காலில் கலப்பதை தடுக்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் காலிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. இதை தடுக்க வேண்டும். கழிவு நீர் பாய்ந்து வெளியேறும் பகுதிகள் குறுகலாக இருப்பதால் மாநகரில் பெரும்பாலான இடங்களில் சாக்கடை தேங்குகிறது. காவிரி தொடர்ந்து கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பார்சல் சேவை மையங்களை புறநகர் பகுதிக்கு முழுமையாக மாற்ற வேண்டும். காலை முதல் இரவு வரை லாரிகள் போக்குவரத்து, மாட்டு வண்டிகள் போக்குவரத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கும் நிலை இதனால் குறையும். ஈரோடு மாநகரின் பழைய நகர்ப்பகுதிகள் முழுவதும் வணிக பகுதிகளாக மாறிவிட்டன. வீடுகளுக்கு அனுமதி பெற்று கடைகள் கட்டி வாடகைக்கு விடுகிறார்கள். இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு மிகுந்த காரணமாக உள்ளது.

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது. கருங்கல்பாளையம் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், குழாய்களில் நல்லிக்குழாய்கள் பொருத்தப்படாமல் இருப்பதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினசரி வீணாகி சாக்கடையில் கலக்கிறது. மாநகரில் இன்னும் பல பகுதிகளுக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில், தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். வீதிகளில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்தால் சரி செய்வது இல்லை. இதற்கான ஒப்பந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை தூய்மை செய்யப்பட்டு அங்கு படித்துறை வசதி செய்வதுடன், பொழுதுபோக்கு பூங்கா ஏற்படுத்தப்பட வேண்டும். வ.உ.சி.பூங்காவில் இருந்து காய்கறி மார்க்கெட் கடைவீதிக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். வ.உ.சி.பூங்கா முழுமையாக பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதாள சாக்கடை

முன்னாள் கவுன்சிலர் சாம்ராட் அசோகன் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. தொடக்கத்தில் பழைய நகராட்சி பகுதிகளில் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் ஒருங்கிணைந்த மாநகராட்சி முழுவதும் திட்டம் வரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், திட்டப்பணிகள் இன்னும் முடியவில்லை. பணி முடிந்ததாக கூறப்படும் இடங்களில் பாதாள சாக்கடை தொட்டிகள் உடைந்து பழுதடைந்து கிடக்கின்றன. நடுரோட்டில் உள்ள இந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. பாதாள சாக்கடை திட்டமும் முழுமையாக செயல்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணியில் வருகிற கோடை காலத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் முழுமையாக இணைப்பு கொடுக்க வேண்டும். ஏற்கனவே பொதுமக்கள் குடிநீர் வரி செலுத்தி வரும் நிலையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்கு என்று தனியாக வரி வசூல் செய்யக்கூடாது. பள்ளங்கள் வெட்டப்பபட்ட ரோடுகள் விரைவாக சரி செய்யப்பட வேண்டும். முன் அறிவிப்பு இன்றி பல ரோடுகள் துண்டிக்கப்படுவதால் அந்தந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இது அரசுக்கும் மாநகராட்சி நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே பணிகள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் பூங்காக்கள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் சில இடங்களில் அவை முறையான பராமரிப்பு இன்றியும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படாமலும் உள்ளன. பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தால் மட்டுமே வளர்ச்சித்திட்ட பணிகள் நடக்கிறது. கேட்பதற்கு யாரும் இல்லாத இடங்களில் எந்த பணியையும் கண்டுகொள்ளாத நிலையும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஆட்சியாளர்களுக்கு மதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் பணி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாலைகள்

மாணிக்கம்பாளையம் நல்லித்தோட்டத்தை சேர்ந்த வீரக்குமார் கூறியதாவது:-

ஈரோட்டில் மிக அத்தியாவசிய தேவையாக சாலைகள் உள்ளன. ஈரோட்டில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியாக முனிசிபல் காலனி, பெரியவலசு, மாணிக்கம்பாளையம் பகுதிகள் உள்ளன. மாணிக்கம்பாளையத்தில் இருந்து முனிசிபல் காலனி செல்லும் சாலை மிகுந்த பழுதடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன.

தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கும் ஈரோட்டுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றன. ஆனால் சாலைகள் வசதியாக இல்லை. பெருந்துறை ரோடு மேடுபள்ளமாக விபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. திண்டல் சுற்றுவட்டச்சாலை இணைப்பு பகுதி விபத்துகள் அதிகம் நடைபெறும் இடமாக மாறிவிட்டது. சுற்றுவட்டச்சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாததால் விபத்துகள் நடக்கின்றன. ஈரோடு மாநகரின் விரிவாக்கத்துக்காக கூடுதலாக பூந்துறை ரோடு, சென்னிமலை ரோடு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும். சாலைகள் முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஈரோட்டில் முழுமையான ஒரு பொழுதுபோக்கு இடம் என்பதே இல்லை. வ.உசி.பூங்கா புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியம். காய்கறி சந்தை கடைகள் கட்டுவதை வேகப்படுத்தி காய்கறி கடைகள் நிரந்தர சந்தைக்கு மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு ஈரோட்டில் பல தேவைகள் இருக்கின்றன. இவற்றை விரைவாக நிறைவேற்ற வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்