ஊருக்குள் புகுந்த சிறுத்தை; நாயை கடித்துக் கொன்றது

கடையம் அருகே நேற்று அதிகாலை ஊருக்குள் சிறுத்தை புகுந்து நாயை கடித்துக் கொன்றது.

Update: 2023-10-11 18:45 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு, பொதுமக்களையும் அச்சுறுத்துகின்றன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடையம் அருகே அமைந்துள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற மலையடிவார கிராமம் அருகே அட்டகாசம் செய்த சுமார் 8 சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

பின்னர் சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). விவசாயியான இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் நாயை கட்டிப்போட்டிருந்தார்.

நேற்று அதிகாலை மலையடிவாரத்தில் இருந்து இறங்கிய சிறுத்தை, பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

அங்கு முருகன் வீட்டின் அருகே வேப்ப மரத்தில் கட்டிப் போட்டிருந்த நாயை கடித்துக் கொன்றது. பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்த முருகன், நாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஊருக்குள் சிறுத்தை புகுந்து நாயை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்